சத்தி அருகே வீட்டில் 8.5 கிலோ சந்தன மரக்கட்டை பதுக்கிய முதியவர் கைது
சந்தன மரக்கட்டை பதுக்கிய பெருமாளை வனத்துறையினர் கைது செய்தனர்.
சத்தி அருகே வீட்டில் சந்தன மரக்கட்டை பதுக்கிய முதியவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் இருந்து 8.5 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் காவல் சுற்றுக்கு உட்பட்ட கே.என்.பாளையம் நரசாபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் சந்தன மரக்கட்டை வைத்திருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு நேற்று (25ம் தேதி) தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று, அங்கு கருப்பணன் மகன் பெருமாள் என்ற கட்டபெருமாள் (வயது 64) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் 8.5 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெருமாளை போலீசார் பிடித்து, சந்தனகட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் சந்தன மரக்கட்டைகள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர், பெருமாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர், நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu