கோபியில் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி
Erode News- வீட்டின் படுக்கை அறை தீயில் சேதமாகி கிடப்பதை படத்தில் காணலாம். உள்படம்:- அருண்ரங்கராஜன்.
Erode News, Erode News Today- கோபியில் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் அருண்ரங்கராஜன் (வயது 38). இவர் கடந்த 2012ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி இலக்கியா. இவரும், கர்நாடக மாநில முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அருண்ரங்கராஜன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய போது அதே பிரிவில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுஜாதா (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் போலீசாக பணியாற்றி வந்த நிலையில், அருண்ரங்கராஜன், சுஜாதா இடையேயான பழக்கம் குறித்து கண்டப்பாவுக்கு தெரியவந்தது.
இதுபற்றி கண்டப்பா அருண்ரங்கராஜனின் மனைவி இலக்கியாவிடம் கூறி உள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சுஜாதாவும், அருண்ரங்கராஜுடன் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அருண்ரங்கராஜன் மற்றும் சுஜாதா ஆகியோர் கோபிக்கு வந்தனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் அருண்ரங்கராஜ் சுஜாதாவை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ரங்கராஜை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அருண்ரங்கராஜன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓரிரு நாளில் மீண்டும் பணியில் சேர இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சுஜாதா மீண்டும் கோபி வந்து அருண்ரங்கராஜனுடன் தங்கி இருந்து வந்துள்ளார். நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டவே, சுஜாதாவை அருண்ரங்கராஜன் தாக்கியுள்ளார். இதனால் சுஜாதா வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர், ஆத்திரத்தில் இருந்த அருண்ரங்கராஜன் தன்னுடைய வீட்டின் படுக்கை அறைக்கு தானே தீ வைத்துக் கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். தீ வீடு முழுவதும் பரவி புகை வெளியேறியது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இருந்தபோதிலும், வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் இருந்த அருண்ரங்கராஜனை மீட்க முயன்றனர். அப்போது அருண்ரங்கராஜ் காவல் ஆய்வாளரை தாக்கியதாக தெரிகிறது. அதன் பின்னர் அருண்ரங்கராஜனை அங்கிருந்த மற்ற போலீசார் மீட்டு கோபி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடமும், சுஜாதாவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu