பண்ணாரி அருகே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பண்ணாரி அருகே 2 நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை செவ்வாய்க்கிழமை (இன்று) உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் - பண்ணாரி சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (3ம் தேதி) இரவு 2 மாதமான குட்டியுடன் 40 வயது மதிக்கத்தக்க தாய் யானை ஒன்று வந்துள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாய் யானை, அப்பகுதியில் உள்ள வனத்தில் மயங்கி விழுந்தது. இதைப்பார்த்த அதன் குட்டி யானை, தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த யானைக்கு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக ஆசனூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் சுதாகர் தலைமையிலான வனத் துறையினர் உதவியுடன், கால்நடை மருத்துவர் சதாசிவம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த யானை இன்று செவ்வாய்க்கிழமை (6ம் தேதி) உயிரிழந்தது.
மேலும், இந்த யானையின் இரண்டு மாத பெண் குட்டி யானை தற்போது வனத்துறையினரின் பராமரிப்பில் உள்ளது. தாய் யானை உயிரிழந்து விட்டதால், குட்டி யானையை பண்ணாரியில் அடர்ந்த வனப்பகுதியில் யானை கூட்டத்துடன் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu