ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட குமாரபாளையம் தொகுதியில் 22 மண்டலங்களும், 279 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 704 வாக்காளர்களும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 மண்டலங்களும், 237 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 823 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 24 மண்டலங்களும், 302 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 858 வாக்காளர்களும் உள்ளனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் 22 மண்டலங்களும், 277 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 28 ஆயிரத்து 700 வாக்காளர்களும் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் 30 மண்டலங்களும்,298 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 60 ஆயிரத்து 247 வாக்காளர்களும் உள்ளனர். காங்கயம் தொகுதியில் 28 மண்டலங்களும், 295 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 446 வாக்காளர்களும் என மொத்தம் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3,896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உள்பட மொத்தம் 12 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச் சாவடிகளில் 191 வாக்குச் சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படக் கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1,476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் (live web casting) மூலமாக கண்காணிப்படுவதுடன், நுண்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லவும், வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல் துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச் சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள், தேவையில்லா வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131ன் படி காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் தேர்தலுக்கு முந்தை நேரத்தில் (3 நாள்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவிரப்படுத்தப்படும். அதேபோல, 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிரப்படுத்தப்படும். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள், மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக் கூடாது. கூட்டம் கூடக் கூடாது. மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சிவிஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு, முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்துக்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3,001 பேர் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டீ வழங்கப்பட்டு, அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக் குச்சாவடிகள் உள்ள மையத்தில், வழிகாட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.
தேர்தல் பணியில் 10,970 அரசு அலுவலர் கள், ஆசிரியர்களும், தவிர, ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2,500 பேரும் என மொத்தம் 13,000க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்தலில் பணியாற்றவுள்ளனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்குப் பின்னர் சில தளர்வுகள் இருக்கும் அதுகுறித்து, தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு, முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து, மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும். அப்போதும், முகவர்கள் வரவில்லை எனில், வாக்குச் சாவடி தலைமை அலுவலரே, மாதிரி வாக்குப்பதிவை நடத்திடுவார்.
50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால், ஒரு வேட்பாளருக்கு 1 வாக்கு என மாதிரி வாக்குப்பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்குச் சாவடியில், அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொலைபேசி, இன்டெர்நெட் வசதி தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் கிடைக்காத வாக்குச்சாவடிகளுக்கு, வனத்துறையினர் 'மைக்' மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்திரிமலை, மல்லியம்மன்துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல, மண் சாலைகளே உள்ளன. இருப்பினும் கூடுதல் வசதி, அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu