திமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தம்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாதங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயகுமார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருங்கல்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில் அருகே கோபால் தோட்டம் வீதிகளின் வழியாக வீடு வீடாகச் சென்று ஈரோடு ஐயப்பன் கோவில் சிறப்பு பூஜை செய்து அதன் பிரசாதங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணா திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, கடந்த 2011 திமுக ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ.1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடியார் மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 4200 கோடி நிதி செலவிடப்பட்டது.
2011 வரை திமுக ஆட்சியில் 500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்ததும் அது ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூபாய் 1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக, தென்னரசு வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும் என கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சரண் பிரபாகர், மதுரை தெற்கு முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ் சரவணன், மாநில அம்மா பேரவை இளங்கோவன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் சவுகார்பட்டி சரவணன் மற்றும் அண்ணா திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu