ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் தீர்ப்பு வெளியானது.அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதனைக் கொண்டாடும் வகையிலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக அலுவலகம் முன்பு பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில், முன்னாள் துணை மேயரும் சூரியம்பாளையம் பகுதி அதிமுக செயலாளருமான கே.சி.பழனிசாமி முன்னிலையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெரியார் நகர் பகுதி அதிமுக அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் எஸ்பிஎஸ் கார்னர் அருகே சத்தியமங்கலம் நகர செயலாளர் சுப்ரமணி தலைமையில், அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் சிவராஜ், மாரப்பன், பேரூராட்சி செயலாளர் நடராஜ், செல்வம் மற்றும் கொமரபாளையம் சரவணன் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பெருந்துறையில் ஒன்றியச் செயலாளர்கள் அருள் ஜோதி செல்வராஜ், வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோரது தலைமையில் பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதேபோல், பவானி-அந்தியூர் பிரிவில் பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி. நாத் (எ) மாதையன், ராஜேந்திரன், மம்மி டாடி மூர்த்தி, பூக்கடை மாதேஸ்வரன், அர்ஜுனன், பிரகாஷ், பிரபாகரன், உட்பட பல்வேறு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு, அந்தியூர் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமையில், அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu