ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல சாகச பயணம் மேற்கொள்ளும் நோயாளிகள்
ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் கூர்மையாக நீண்டுள்ள கம்பிகளுக்கு மேல் போடப்பட்ட பலகையினை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை பேரூராட்சி அலுவலகம் எதிரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, ஜம்பை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஜம்பை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியின் காரணமாக ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில் வடிகால் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், கட்டுமான பணியில் தேக்கநிலை ஏற்பட்டதால் மிகவும் தாமதமாக பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், கூப்பிடும் தூரத்தில் இருந்த சுகாதார நிலையத்திற்கு செல்ல பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வடிகாலின் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்ட நிலையில், நடைபாதை கட்டுமான பணி நடைபெறவில்லை. இதனால், கண் பார்வையில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, கான்கிரீட் தடுப்பு சுவரின் கம்பிகள் கூர்மையாக வெளியே நீட்டிக் கொண்டு காட்சியளிக்கும் நிலையில் நோயாளிகள், பொது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதன் மீது போடப்பட்டுள்ள பலகை மீது சாகசப் பயணம் செய்து, மறுபுறம் சென்று வருகின்றனர்.
சிறிது தடுமாறினாலும், தவறினாலும் கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகள் மேல் விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில் கட்டுமான பணியை நிறைவு செய்து தர வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu