ஈரோடு: அதிமுக மாவட்ட கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு
மாரடைப்பால் காலமான அதிமுக மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல்.
அதிமுக மாவட்ட கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, கருவல்வாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் கே.எஸ். சண்முகவேல் (வயது 64), மாவட்ட கவுன்சிலர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு கருவல்வாடிபுதூர் கிளை செயலாளராக கட்சி பணியை துவக்கினார். அதனையடுத்து 2001 முதல் 2011 வரை யூனியன் கவுன்சிலராகவும் , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும்,. கட்சி பொறுப்பை பொருத்த வரையில் 2003 ல் ஒன்றிய விவசாய பிரிவு பொருளாளராகவும் 2005 ல் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராகவும் 2017ல் ஊராட்சி செயலாளராகவும், 2020 முதல் மாவட்ட பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும், இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுவின் 3-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் துணை தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். அதிமுக-வில் அந்தியூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவராக கட்சி பொறுப்பில் இருந்தார். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 1,275 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், இவருக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சண்முகவேலின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் இறந்த சண்முகவேலின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அந்தியூர் நகரச் செயலாளர் டி.எஸ். மீனாட்சிசுந்தரம், மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் குருராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சண்முகானந்தம், பாலுச்சாமி, ஹோட்டல் கிருஷ்ணன், இளைஞரணி பார் மோகன், வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் ராஜா சம்பத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அந்தியூர், கோபி, கள்ளிப்பட்டி, டி.என். பாளையம் பகுதிகளைச் சேர்ந்த அதிமுக கட்சி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது இல்லத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை 10.30 மணி அளவில் அத்தாணி கருவல்வாடிப்புதூர் பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரை பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. மாவட்ட கவுன்சிலரின் திடீர் மரணம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu