இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஈரோட்டில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தேர்தல் நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரம் முன்பு எந்த பிரச்சாரமும் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், பிரதமர் மோடி விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்வது போல கன்னியாகுமரியில் 48 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் மூலம் வாக்காளர்களை அவர் கவர நினைக்கிறார். இது குறித்து மோடியின் கைப்பாவையாக விளங்கும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர், காந்தி படம் வெளிவந்த பிறகு காந்தியை பற்றி உலகம் தெரிந்து கொண்டது என்று கூறுகிறார். ஆனால் தேசப்பிதா காந்தி உயிரோடு இருக்கும் போதே அவரது அகிம்சை கருத்துகள் உலகம் முழுதும் பரவத் துவங்கின.
இது கூட தெரியாமல் ஒரு பிரதமர் நாட்டை பத்தாண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். தேர்தல் முடிந்ததும் இவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய நிலைமை ஏற்படும். அதானி மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வாங்கப்பட்ட நிலக்கரியில் ஊழல் நடந்துள்ளது என்று எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கூறியுள்ளார். ரூபாய் 6,000 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட அந்த நிலக்கரியில் ஊழல் நடந்து உள்ளது. இது சம்பந்தமாக மோதியோ, அமித்ஷாவோ, நட்டாவோ வாய் திறக்கவில்லை.
இது ஊழல் நடந்துள்ளதை உறுதி செய்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் வெவ்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும் அவைகள் அந்தந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் வந்ததும், பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். கடந்த தேர்தலின் போது முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார்.
திருமாவளவன் கூறியபடி ஐந்து ஆண்டுகளுக்கு 5 பிரதமர் வந்தாலும் தவறு இல்லை. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். பத்தாண்டுகள் ஒன்றுமே செய்யாத மோடியை விட அவர்கள் நாட்டுக்கு நிறைய செய்வார்கள். அதிமுக ஜூன் 4க்கு பிறகு காணாமல் போய்விடும். அணைய போகும் விளக்கு என்றெல்லாம் அண்ணாமலை பேசியுள்ளார். ஜூன் 4க்கு பிறகு அண்ணாமலை எங்கிருக்கிறார் என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தி எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆனி ராஜா வயநாட்டில் போட்டியிட்டுள்ளார்.
இது ஜனநாயகத்தில் சகஜம்தான். தோல்வி பயம் கருதி ராகுல்காந்தி ரேபரலியில் போட்டியிட செல்லவில்லை. அப்படி அவர் சென்றார் என்றால் ஏன் பிரதமர் இரண்டு தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டார். வாரணாசியில் இந்த முறை அவர் நிச்சயம் தோல்வி அடைவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu