ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக  போட்டியிடவில்லை: டிடிவி தினகரன்
X

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது. பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project