ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு, வங்கி கணக்கு தொடங்குதல் முகாம்
Erode news- ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆதார் பதிவு செய்தல் குறித்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்து, பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளும் பணிக்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இப்பணியினை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தில் 19 ஆதார் கருவிகளைக் கொண்டு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தரவு உள்ளீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தரவு உள்ளீட்டாளர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி வழங்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இன்று (ஜூன்.10) திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆதார் பதிவு மாற்றம், புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் இம்முகாம் நடைபெறுகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு புதிய பதிவுகள், ஆதார் எண் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.
ஆதார் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது, தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய குழந்தைகளுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படுகிறது.
8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி இச்சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குதல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு நடப்பாண்டிற்கான பாடப்புத்தகங்களை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், முதன்மை கல்வி அலுவலர் சம்பத், உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu