ரூ.20,000க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சைப் பழம்: கோவில் விழாவில் ருசிகரம்

ரூ.20,000க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சைப் பழம்: கோவில் விழாவில் ருசிகரம்
X

எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்ட போது எடுத்த படம். உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சித்தர் கோவிலில் மஹா சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட ஓர் எலுமிச்சைப் பழம் ரூ.20 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

மொடக்குறிச்சி அருகே சித்தர் கோவிலில் மஹா சிவராத்திரி பூஜையில் வைக்கப்பட்ட ஓர் எலுமிச்சைப் பழம் ரூ.20 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த விளக்கேத்தி அருகே புது அண்ணாமலை பாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் எனப்படும் பிரசித்தி பெற்ற சித்தர் கோவில் கோவில் உள்ளது. இங்கு, மஹா சிவராத்திரி பூஜைகள் என்றால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபடுவது வழக்கம்.

மேலும், இந்தக் கோவிலில் சிவராத்திரிக்கு அடுத்தநாள் கடவுளுக்கு அணிவித்த பொருட்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெறும். அதாவது சாமிக்கு அணிவித்த வெள்ளி நெற்றிக் காசு, வெள்ளி மோதிரம், சுவாமி கையில் இருந்த எலுமிச்சை பழம் ஆகியவை ஏலம் விடப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டு விழாவில் மஹா சிவராத்திரி விழாவிற்கான பூஜைகள் வெகு விமர்சியுடன் துவங்கி, நடைபெற்றது. நேற்று (சனிக்கிழமை) மாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது.

ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்த ஏலம், பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஏலத்தை கண்டு களித்து கொண்டிருந்தனர். ரூ.2 ஆயிரத்தில் ஆரம்பித்த ஏலம் கடைசியாக ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

மொடக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பக்தர் இந்த பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார். இந்த எலுமிச்சையை வீட்டில் வைத்து பூஜை செய்தால் பல நன்மைகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதேபோல், சுவாமியின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் காசு ரூ.15,300 ரூபாய்க்கும், சுவாமி கையில் அணிவிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் ரூ.14,100 ரூபாய்க்கும் ஏலம் போயின.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!