கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு
Erode news- கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2ம் நாள் ஜமாபந்தியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை - நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அனைத்து பதிவுகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது தொடர்பான விளம்பர தட்டியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்ட போது எடுத்த படம்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 1433-ம் பசலி ஆண்டிற்கான கோபிசெட்டிபாளையம் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு 2ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் ஜூன் மாதம் 20ம் தேதி (நேற்று) முதல் தொடங்கப்பட்டு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
மேலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 20ம் தேதி அன்றும், (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஜமாபந்தியின் இரண்டாவது நாளான இன்று (21ம் தேதி) கோபி உள்வட்டத்தைச் சேர்ந்த கரட்டுப்பாளையம், கோட்டுபுள்ளாம்பாளையம், அயலூர், பழைபாரியூர்கரை, அக்ரஹாரக்கரை, செய்யாம்பாளையம்கரை, வீரபாண்டி, பாரியூர், செங்கலக்கரை, மொடச்சூர், குள்ளம்பாளையம், (அ) கலிங்கியம், (ஆ) கலிங்கியம், லக்கம்பட்டி ஆகிய கிராம பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 207 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதில், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையினை வழங்கினார். மேலும், இன்று(21ம் தேதி) இரண்டாம் நாள் பெறப்பட்ட மனுக்களின் மீது மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை- நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அனைத்து பதிவுகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது தொடர்பான விளம்பர தட்டியினை வெளியிட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை- நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இதில், ஊரக பட்டா மாறுதல், ஊரக உட்பிரிவு, ஊரக எல்லை அளவு மனுக்கள் மற்றும் நத்தம் பட்டா மாறுதல், நத்தம் எல்லை அளவு மனுக்கள், நத்தம் உட்பிரிவு மனுக்கள் மற்றும் நகரம் பட்டா மாறுதல், நகரம் உட்பிரிவு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து மனுக்கள் மற்றும் புலப்படங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் https://tamilnilam.tn.gov.in/citizen/ , https://eservices.tn.gov.in/eservicesnew/home.html ஆகிய இணையதள முகவரியினை பயன்படுத்திக் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஜமாபந்தியில், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu