மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
அந்தியூர் அருகே பர்கூரில் தோட்டத்து மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு வனத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனச்சரகம் தாமரைக்கரை பிரிவு பெஜிலட்டி காவல் சுற்றுக்கு உட்பட்ட கல்வாரை கிராமத்தில் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனப்பணியாளர்கள் மற்றும் தாமரைக்கரை மின்வாரியத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வனஎல்லையோரம் மற்றும் கிராம புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
அப்போது, கல்வாரை கிராமத்தில் வசிக்கும் வெள்ளையன் மகன் செலம்பன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் மஞ்சள் மற்றும் குச்சிக்கிழங்கு பயிர்களை பயிர் செய்துள்ள, நிலத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள குறைந்த மின்அழுத்த மின்வேலியில் நேரடி மின்சாரம் உள்ளதா என கண்டறியும் கருவியினை கொண்டு வனப்பணியாளர்கள் சோதனை செய்தனர்.
அதில், நேரடி மின்சாரம் கம்பி வேலியில் பாய்ச்சியது உறுதி செய்யப்பட்டது. மேலும், செலம்பனுக்கு சொந்தமான நிலத்தில் மின்அறைக்கு அருகில் உள்ள மின்கம்பத்திலிருந்து நேரடியாக கொக்கியின் மூலம் கம்பி வேலிக்கு நேரடி மின்சாரம் கொடுக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர். உடனே, அந்த நேரடி மின்சார இணைப்பினை மின்வாரியத்துறை பணியாளர்கள் துண்டித்தனர்.
பின்னர், ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி, செலம்பனை பிடித்து பர்கூர் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், வன உயிரினக் குற்ற வழக்குப்பதிவு செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குற்ற செயலுக்கு மின்சாரத் துறையின் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறையினர் கடிதம் மூலம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu