சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி பழனிச்சாமி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயியை காட்டு யானை தாக்கியதில் பலியானார்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயியை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி ஏலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (44), விவசாய பணி செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பருடன் குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாமரத்துபள்ளம் பிரிவு அருகே சென்ற போது, புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலைக்கு வந்தது. இரவு நேரத்தில் திடீரென காட்டு யானை சாலைக்கு வந்ததால், அச்சமடைந்த விவசாயி பழனிச்சாமி செய்வதறியாமல் திகைத்த நிலையில் வாகனத்தை நிறுத்திய தால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை கண்ட காட்டு யானை துரத்தி தாக்கியது.

இதில், விவசாயி பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்தவர் வேகமாக தப்பி ஓடி மயிரிழையில் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுயானையை விரட்டி பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே ராமபைலூர் பகுதியில் வாழைத் தோட்டத்திற்கு காவல் இருந்த விவசாயி அம்மாசைகுட்டி என்பவர் காட்டு யானை தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது. சத்தியமங்கலம் பகுதியில் டிசம்பர் மாதத்தில் மட்டும் யானை தாக்கி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!