ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
காளை மாட்டை தாக்கிய காட்டு யானை.
கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரக மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை குத்தியாலத்தூர் ஊராட்சி இருட்டிபாளையம் திண்ணையூரில் புகுந்து அங்கு பெருமாள் என்பவரின் வீட்டின் முன்பு கட்டி இருந்த காளை மாட்டை தாக்கி உள்ளது. இதில் அந்த காளை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
இறந்த காளை மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வந்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu