ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 85 மனுக்கள்

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 85 மனுக்கள்
X

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிய  ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 25.10.2024 முடிய 568.6 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 89.65 அடியாகவும், 21.89 மி.கன அடிநீர் இருப்பும் உள்ளது.


நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 71.6 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 30.9 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 13.61 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 62 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 5055 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2404 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2796 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 8150 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் நெல் 6207.34 ஹெக்டேர், சோளம் 11811.66 ஹெக்டேர், நிலக்கடலை 15071.28 ஹெக்டேர், கரும்பு 12434.475 ஹெக்டேர், மஞ்சள் 4421.705 ஹெக்டேர், மரவள்ளி 3984.705 ஹெக்டேர், பாக்கு 1861.05 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எல்.பீ.பி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நாட்களை அதிகரிக்க வேண்டும், மரவள்ளி கிழங்கில் விலை நிர்ணயம் செய்வதுடன், அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களை விவசாயிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும், கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும், அதிகப்படியான நாய்கள் தொல்லை, உர விற்பனை விலை வேறுபாடுகளை சீரமைக்க வேண்டும்.

மஞ்சளுக்கென தனியாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மொடக்குறிச்சி குரங்கன் ஓடையில் சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விவசாயிகளின் இடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டியும் என முன்வைத்த கோரிக்கைகளுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் பதில் அளித்தனர்.


அதனை தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 85 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், செயற்பொறியாளர், நீர்வள ஆதாரதுறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம், வருவாய்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய‌ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு