ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 53 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரேஷன் அரிசி பறிமுதல்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 53 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 53 ஆயிரத்து 100 கிலோ (531 குவிண்டால்) ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
அரசு மானிய விலையில் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர்களை வியாபாரத்திற்காக பயன்படுத்தியதாக 58 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனங்கள் 47, நான்கு சக்கர வாகனங்கள் 30 என மொத்தம் 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 93 வாகனங்கள் ரூ.27 லட்சத்து 71 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டு, வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக பவானியை சேர்ந்த சக்திவேல் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பழங்குற்றவாளிகள் 70 பேர் கண்காணிக்கப்பட்டு, ஆர்டிஓ முன் ஆஜர்படுத்தி நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. இது தவிர 48 வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, பர்கூர், கடம்பூர் போன்ற கர்நாடக மாநில எல்லையில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தல் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu