கோபி அருகே ஜெராக்ஸ் இயந்திரத்தில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

கோபி அருகே ஜெராக்ஸ் இயந்திரத்தில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூரைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 31). இவர், நேற்று முன்தினம் இரவு திங்களூர் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு காய்கறி வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார்.

தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்த பழ வியாபாரியிடம் ரூ.500ஐ கொடுத்து, ரூ.100க்கு பழங்கள் வாங்கி கொண்டு ரூ.400ஐ பெற்று சென்றார். அந்த நபர் கொடுத்த ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருந்ததால் ஸ்டெல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், ஸ்டெல்லா ரூபாய் நோட்டை தந்த நபரை பின் தொடர்ந்து சென்றார்.

அப்போது, அந்த நபர் சந்தை அருகே நிறுத்தி இருந்த காரில் ஏறி சென்றார். காரில் இரு பெண்கள் உட்பட 3 பேர் இருந்தனர். பின்னர், ஸ்டெல்லா பணத்தை பரிசோதித்து பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், கோபி சாலையில் ஆவரங்காடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகமளிக்கும் வகையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அந்த காரில் இருந்த 4 பேர் திங்களூர் சந்தையில் கள்ளநோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸ் அவர்களை கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்தியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 40), அவரது தந்தை ஜெயபால் (வயது 75), தாயார் சரசு (வயது 70), மேட்டுப்பாளையம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிலுவை தாஸ் மனைவி மேரி மில்டிலா (வயது 42) ஆகியோர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், ஜெயராஜ், யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே கலர் ஜெராக்ஸ் மிஷின் மூலம் ஏ4 சீட்டில் கள்ளநோட்டுகளை தயார் செய்து, 3 பேருடன் சேர்ந்து சந்தைகளில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

மேலும், மேரி மில்டிலா கடந்த 4 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து ஜெயராஜூடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு வருட காலமாக சத்தியமங்கலம், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தாராபுரம், காங்கேயம், சிறுவலூர், கோபி, திங்களூர், பெருந்துறை என பல்வேறு சந்தைகளில் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் ஜெயராஜ் வீட்டில் நடத்திய சோதனையில், இரண்டு கலர் ஜெராக்ஸ் மிஷின் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இருந்த 100, 200 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story