ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்திருந்த 300 கடைகள் அகற்றம்
சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்திருந்த 300க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி சாலை சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், இந்த சாலை வழியாக தான் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன.
இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையை முழுமையாக அடைத்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையோரம் இருபுறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர். எல்லை மாரியம்மன் கோவில் வரை 1 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 150 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 30 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வராணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu