ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்
லாரிகள் வேலை நிறுத்தம் (கோப்புப் படம்).
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வியாழக்கிழமை (நேற்று) வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.
தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், அடையாள வேலைநிறுத்த போராட்டம் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது. இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சம்பத் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மஞ்சள், எண்ணெய், ஜவுளி, கொப்பரை, தேங்காய் உள்ளிட்டவை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி, ரசாயனம், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஈரோட்டுக்கு எடுத்து வரப்படுகின்றன.
மாவட்டத்தில் 4,500 லாரிகள் உள்ளன. இதில் 1,500 லாரிகள் வெளிமாநிலங்களுக்கு செல்வதால் அவற்றை கணக்கில் கொள்ளவில்லை. மீதமுள்ள 3 ஆயிரம் லாரிகள் வியாழக்கிழமை (நேற்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் மாவட்டத்தில் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கை குறித்து சம்மேளனம் மூலம் முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் மனுவாக வழங்கி உள்ளோம். எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில அளவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu