ஈரோடு மாவட்டத்தில் ரூ.2.95 கோடிக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் ரூ.2.95 கோடிக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு
X

ஈரோடு காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 2024 2025ம் ஆண்டிற்கு ரூ.2.95 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2024 2025ம் ஆண்டிற்கு ரூ.2.95 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், ஈரோடு காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து, கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (2ம் தேதி) தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 2 கதர் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 160 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 நெசவாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 200 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை நெசவுக்கூலி பெறுகின்றனர்.


2023-2024-ம் ஆண்டு ரூ.88.01 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலியஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் காதி கிராப்ட் மூலம் 2023-2024ம் ஆண்டிற்கு ரூ.2.65 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1.87 கோடிக்கு கதர் பட்டு மற்றும் பாலியஸ்டர் ரகங்கள், சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்யூட்டர் சாம்பிராணி, கப் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவாரணி, எழில் ஷாம்பு மற்றும் அக்மார்க் தேன் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே 2024 2025ம் ஆண்டிற்கு ரூ.2.95 கோடிக்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை ரூ.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கதரங்காடி மற்றும் அதனை சார்ந்த பல்வேறு இடங்களில் (அரசு அலுவலகங்களில்) கூடுதலாக தற்போது கதர் விற்பனை நிலையங்களும் அமைத்து அனைத்து கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.


மேலும், நடப்பாண்டில் புதியதாக உலர் பழங்கள், நெல்லி, பேரீச்சை, அத்திபழம் மற்றும் வால்நட்ஸ் ஆகியவைகளை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் தயார் செய்தும், இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட இராசாயன கலப்படம் இல்லாத பாரம்பரியமிக்க பூங்கார், இரத்தசாலி, கருப்புகவுனி, சீரகசம்பா, தூயமல்லி அரிசி வகைகள், பரிச்சுத்தமான மரச்செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக சமையலுக்குத் தேவையான பொடி வகைகள் மற்றும் கைவினை பொருட்கள், கால் மிதியடி மற்றும் கொலு பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கதர் ரகங்கள் விற்பனை செய்திட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் பணியாளர்கள் இத்துறை மூலம் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தக்கூடிய வகையில் கதர் துணிகள் கடனாக பெற்று பயன்பெற்று வருகின்றனர்.


சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை பொது மக்களும் அரசு அலுவலர்களும் பயன்படுத்தி கொண்டு உழவுக்கு அடுத்த படியாக நெசவுத் தொழிலில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவிடும் பொருட்டும் அண்ணல் காந்தியடிகளின் கனவை நனவாக்க கதர் ரகங்களை அதிக அளவில் கொள்முதல் செய்து கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2024 - 2025ம் ஆண்டில் 26 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கதர் பருத்தி, கதர் பட்டு மற்றும் பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில், மேலாளர் அனுசியா, துணை மேலாளர் ராணி, மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் சரவண பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!