முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பதிவு செய்ய 25ம் தேதி கடைசி: ஈரோடு ஆட்சியர்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2024 குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2024 குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (19ம் தேதி) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.
அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் மாநில அளவில் தனி நபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுபோட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கும் மூன்றாம் பரிசுக்கு இணையாக பரிசு வழங்கிட உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுபோட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி தேதி வரும் 25ம் தேதி ஆகும்.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தாங்களாகவோ தங்கள் பள்ளி,கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu