பவானியில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை பதுக்கிய 2 போலீசார் அதிரடி இடமாற்றம்
போலீசார் பணியிட மாற்றம் (பைல் படம்).
பவானியில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கிய விவகாரத்தில், 2 போலீசாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பிரிவில் பவானி போக்குவரத்து போலீசார் பிரபு (வயது 28) மற்றும் சிவக்குமார் (வயது 30) ஆகியோர் நேற்று முன்தினம் (12ம் தேதி) மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு சரக்கு வாகனத்தில் ரூ.8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா இருந்தது தெரியவந்தது. உடனடியாக, சரக்கு வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் இறக்கி வைத்து விட்டு வேனை எடுத்து செல்லுமாறு டிரைவர் ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சரக்கு வாகன டிரைவர் ராஜேந்திரன் இந்த சம்பவம் குறித்து சரக்கு வேனின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவர் செல்போனில் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை முறையாக காவல் நிலையம் கொண்டு செல்லாமல் தனியாக ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விட்டு செல்லுமாறு போலீசார் கூறியதை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையிலான போலீசார், இரு போக்குவரத்து போலீசாரிடமும் விசாரித்தனர். தொடர்ந்து, வெப்படையில் வீட்டில் பதுக்கி வைத்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பவானி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்த குட்காவை பதுக்கி வைத்த போக்குவரத்து போலீசார் இருவரையும், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu