ஈரோடு மாவட்டத்தில் 192.50 மி.மீ மழை பதிவு
அத்தாணி - சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் அவதியடைந்து வந்தனர். எனினும், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் 2 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து 2.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர், இடியுடன் கூடிய கனமழையாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதேபோல, பெருந்துறை அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரிப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக, அத்தாணி - சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதேபோல், கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 28.00 மி.மீ ,
கோபிசெட்டிபாளையம் - 23.20 மி.மீ ,
பவானி - 19.40 மி.மீ ,
பெருந்துறை - 40.00 மி.மீ ,
கொடுமுடி - 6.00 மி.மீ ,
மொடக்குறிச்சி - 1.20 மி.மீ ,
கவுந்தப்பாடி - 9.40 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 5.40 மி.மீ ,
அம்மாபேட்டை - 23.40 மி.மீ ,
பவானிசாகர் அணை - 2.40 மி.மீ ,
கொடிவேரி அணை - 3.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 7.80 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 23.30 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 192.50 மி.மீ ஆகவும் , சராசரியாக 11.32 சதவீதமாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu