தமிழகத்தில் போதை பொருள் விற்ற 17,481 கடைகளுக்கு ரூ.33.81 கோடி அபராதம்
போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழை அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் வழங்கினர்.
போதை பொருட்களை விற்பனை செய்த 17,481 கடைகள் சீல் வைத்ததோடு, ரூ.33.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் இன்று (11ம் தேதி) காலை நடந்தது. இதில்,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் எனும் மிகவும் பயனுடைய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கமான மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தினை உறுதி படுத்துவதற்காக, நல்ல சமுதாயத்தினை உருவாக்குவதற்காக என்ற இலக்குகளை மையமாக கொண்டு இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- ஈரோட்டில் மிகச் சிறப்பான நோக்கத்துடன் இந்த மாரத்தான் போட்டிகள் நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 150 மாரத்தான்களின் பங்கேற்றுள்ளேன். நேற்று (10ம் தேதி) உதகமண்டலத்தில் விர்சுவல் மாரத்தான் என்ற 21 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 16 கிராமங்களை கடந்து இந்த மாரத்தான் நடைபெற்றது.
ஒவ்வொரு கிராமங்களை கடந்து செல்கின்ற பொழுது மருத்துவ கட்டமைப்பு குறித்து கேட்டறிந்து கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பது, போதை கலாச்சாரத்திற்கு எதிரான இந்த தொடர் ஓட்டமாகும். எனவே இந்த போதை கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியினை ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற உயர்கல்வி மாணவர்களுக்கு போதை கலாச்சாரத்திற்கு எதிராக போதை வஸ்துகளை பயன்படுத்த மாட்டோம், போதை நடமாட்டதைத் தடுப்போம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றார்கள். 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற முதல் உறுதிமொழி என்கின்ற வகையில், காவல்துறையினர் மேற்கொண்ட நஞவடிக்கையினால் இந்நிகழ்விற்கு உலக சாதனை விருது கிடைத்தது. அதேபோல், கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், போதை கலாச்சாரத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றார்கள். இதேபோல் நாளை (12ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள குறிப்பாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுவரை 8,66,619 கடைகளில் போதை பொருள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 32,404 கடைகளில் போதை பொருட்கள் இருப்பது கண்டறிப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. 2,86,681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20,91,19,478 ஆகும்.
இதில் 17,481 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.33,28,13,200 அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது. தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் 100 சதவீதம் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போதை கலாச்சாரத்திற்கு எதிரான இந்த தொடர் ஓட்டமானது, 5 கி.மீ, 10 கி.மீ என இரு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடர் ஓட்டமானது வில்லரசம்பட்டியில் தொடங்கி கனிராவுத்தர் குளம் சென்று மீண்டும் வில்லரசம்பட்டி வந்தடைந்தது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை நட்டு வைத்தும், போதை கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு புத்தகத்தினையும் அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு 10 கி.மீ பிரிவில் முதல் பரிசாக ரூ.7,000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை மற்றும் 4 முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயங்களையும்ம், 5 கி.மீ பிரிவில் முதல் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் கோப்பை மற்றும் 4 முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயங்களையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணித்தலைவர் நெல்லை ராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், செயலாளர் பொ.இராமசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu