ஈரோடு வந்தடைந்த 1060 டன் யூரியா உரம்.. வேளாண் இணை இயக்குநர் நேரில் ஆய்வு...

ஈரோடு வந்தடைந்த 1060 டன் யூரியா உரம்.. வேளாண் இணை இயக்குநர் நேரில் ஆய்வு...
X

யூரியா உரம் இறக்குமதி செய்யும் பணியை பார்வையிட்ட இணை இயக்குநர் சின்னசாமி.

சென்னையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1060 மெட்ரிக் டன் யூரியா உரம் இன்று ஈரோடு வந்தடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பாசனத்திற்காக தடப்பள்ளி - அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும், சம்பா பாசனத்திற்காக கீழ் பவானி மற்றும் மேட்டூர் வலது‌ கரை ஆகிய கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு, நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை. மக்காச்சோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக 'பாரத்' யூரியா உரம் சென்னையில் இருந்து எம்.எப்.எல் (ஆகுடு) நிறுவனத்தின் மூலம் 1060 மெட்ரிக் டன்கள் ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது. அதை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இணை இயக்குநர் சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4765 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி உரம் 1914 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரம் 1205 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10877 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 818 மெட்ரிக் டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பட்டியல் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது. விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைக ளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மைச்சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற பெற்று அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இதுதவிர, உரங்களுடன் சேர்த்து, பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985 -இன் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பயன்படுத்தி உரச்செலவை குறைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil