கோவில் பணம் முறைகேட்டை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்
பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூர் கிராமத்தில் மலை உச்சியில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். மேலும் நவராத்திரியின் போது திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழா காலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் இந்த கோவில் நிர்வாகிகள் கோவில் பொது பணத்தை கையாடல் செய்து மோசடி செய்ததாக கூறி ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் பொதுப்பணத்தை நிர்வாகிகள் பேரில் வங்கியில் கூட்டாக கணக்கு தொடங்கி வரவு செலவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு திருவிழா நடத்த வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை அமல்படுத்த கோரியும், ஒரு தரப்பினர் மட்டும் கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என்று கூறி மலையூர் கிராமத்தில் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விட்டு மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோவில் முன்பு பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தகவலறிந்து பென்னாகரம் வட்டாட்சியர் (பொறுப்பு) அன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் ஒரு தரப்பு மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறி கோவில் உண்டியல் மற்றும் அன்னதான கூடம், பொருட்கள் இருப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடும் வரை திருவிழா நடத்த அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu