வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்
X

கோப்புப்படம் 

22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் . குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்டை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அண்மைக்காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி திரிகின்றன.

வால்பாறை அருகே கருமலை எஸ்டேட், ஐயர் பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட் பகுதிகள் உள்ளன.

இந்த பகுதிகளில் 22 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில் அப்பர் பாரனை எஸ்டேட் வனப்பகுதிக்குள் இந்த 22 யானைகளும் முகாமிட்டிருந்தன. மாலையில் அங்கிருந்து தேயிலைத் தோட்டம் வழியாக புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன.

இதனை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு ஊருக்குள் வராமல் விரட்டி விட்டனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது.

எனவே குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!