கனமழை காரணமாக வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.

வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் விட்டு விட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே இன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் அதிக கனமழையும், வால்பாறை, சோலையார் பகுதிகளில் கனமழையும், ஆழியார், சிறுவாணி, பொள்ளாச்சி, சிங்கோனா ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 12.7 செ.மீ. மழை பதிவானது. வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story