தொடர் மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தொடர் மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
X

கவியருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வருகிறது. கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் ஆழியார் அணை அருகே கவியருவி அமைந்துள்ளது. பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் அமைந்துள்ளது கவியருவிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

இதனால் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil