வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
காட்டு யானைகள்
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்தில் உள்ள மூன்று காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த மூன்று யானைகளும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்தது. அப்போது அங்கு கட்டிட தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியது. இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உயிர் பயத்தால் உள்ளேயே பதுங்கிக் கொண்டனர்.
தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப்போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தாய் யானையுடன் வரும் குட்டியானை மற்றும் ஆண் யானை என ஒரு குழுவாக இந்த மூன்று யானைகள் உள்ளன. இந்த மூன்று யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது. எந்த வீடாக இருந்தாலும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை சாப்பிட்டு வருகிறது. மற்ற யானைகள் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும் சேதப்படுத்துவதோடு நின்று விடுகிறது. ஆனால் இந்த மூன்று யானைகளும் எங்கு அரிசி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது.
இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும், இந்த யானைகள் பயப்படுவதில்லை. அதே சமயம் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும் வனத்துறையினர் தயங்குகின்றனர். வீடுகளை உடைக்கும் போது உள்ளே இருப்பவர்களின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வெளியே வராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu