கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள்

கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள்
X

கோவை அருகே வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை.

கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள் அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டுள்ளன.

கோவை மாவட்டம் தடாகம் பன்னிமடை அடுத்த தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் குமார்- தங்கமணி தம்பதியினர் 8 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். இவ்வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் ராஜேஷ்வரி மூதாட்டியும் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தாளியூர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து நடராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த யானைகள், வீட்டின் முன்பு உணவு பொருட்களை தேடியது.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி உள்ளனர். அப்போது அவர்கள் சாப்பிடுவதற்காக வாங்கி வைத்திருந்த தேங்காய் பர்பி மிட்டாயை எடுத்து யானைகள் சாப்பிட்டுள்ளது. தொடர்ந்து பயத்தில் இருந்த நடராஜ் குடும்பத்தினர் சமையல் அறையில் இருந்த முட்டை கோஸ்களை வெளியே தூக்கி வீசினர். இதனையடுத்து அந்த யானைகள் வீட்டில் இருந்து வெளியேறியது. பின்னர் அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள பழனிச்சாமியின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் குமாரின் வீட்டு கதவை உடைக்க முயன்ற நிலையில் குமார் அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கதவை உள்பக்கமாக இருந்து தாங்கி பிடித்துக்கொண்டு சத்தம் எழுப்பியுள்ளனர்.

ஆனாலும் யானை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றது. அப்போது தாய் யானை அருகில் உள்ள மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குட்டி யானையும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில், குமார் தனது மனைவி மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள பழனிச்சாமி வீட்டிற்குள் சென்று உயிர் தப்பினார்.

யானை கதவை உடைத்து தள்ளியதில் குமாரின் கையில் எழும் முறிவும் தங்கமணிக்கு காலில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டி வெளியே சென்றிருந்த நிலையில் அவரும் உயிர் தப்பினார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் குமார் மற்றும் தங்கமணியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கு வந்து இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!