ஓய்வு பெற்ற தலைமையாசிரியை கட்டிப்போட்டு 25 சவரண் நகைகள் கொள்ளை!

ஓய்வு பெற்ற தலைமையாசிரியை கட்டிப்போட்டு 25 சவரண் நகைகள் கொள்ளை!
X

தப்பிச்சென்ற கொள்ளையர்கள்

ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. 70 வயதான இவர், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் ஆகாத இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி விஜயலட்சுமியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின், 4 பவுன் வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். மேலும் விஜயலட்சுமியை நாற்காலியில் கட்டி போட்டு விட்டு பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். பின்னர் விஜயலட்சுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து அவர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் அவரை அப்பகுதி மக்கள் பிடிக்க முயல்வதும் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இரண்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் உள்ள ஸ்டிக்கர்களை கொண்டு அந்த மதுபானங்கள் எந்த மதுபான கடையில் வாங்கப்பட்டது என்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil