கோவை அருகே காட்டுப் பன்றிகள் தொல்லை; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

கோவை அருகே காட்டுப் பன்றிகள் தொல்லை; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
X

குடியிருப்பு பகுதிகளில் உலாவும் காட்டுப்பன்றிகள்

கோவை வடவள்ளி அருகே காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் மகாராணி அவென்யூ அமைந்து உள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் அங்கு வீடுகளுக்கு அருகே உள்ள வாழை மரங்கள் மற்றும் செடிகளை கடித்து சேதப்படுத்துகின்றன. இது மட்டுமல்லாமல் பன்றிகள் கூட்டமாக வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, “கடந்த 30 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். ஆனால் எந்த ஒரு வனவிலங்கு தொந்தரவும் இல்லாத பகுதியாக இந்த குடியிருப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பதற்கு அச்சமாக உள்ளது.முதியவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை உடனடியாக வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றி உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture