வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம் பறிமுதல்
ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை கைப்பற்றினர்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
பூலுவபட்டி மாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர். தொடர் சோதனையில், ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை கைப்பற்றியதுடன், பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப்பையும் கைப்பற்றினர்.
பணம், வாக்காளர்கள் விவரம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவை சார்ந்த ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலில் மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆலந்துறை காவல் நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu