வாடகைக்கு கார்களை எடுத்து அடமானம் வைத்து மோசடி செய்த கும்பல் கைது..!
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
கோவை, செல்வபுரம் காவல் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 22 ம் தேதியன்று இரவு 08:00 மணிக்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த நவாஸ் என்பவர், கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் தனக்கு சொந்தமான கேரள பதிவு எண் கொண்ட காரில் கோவைக்கு வந்ததாகவும், பின்னர் கோவை குற்றாலம், ஈஷா யோகா மையம் போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டு செல்வபுரம் சிவாலாய சந்திப்பு ஐடியல் பேக்கரி அருகில் நிறுத்தப்பட்ட தனது கார் திருட்டு போய் விட்டதாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல், தமிழ்நாடு கோவையை சேர்ந்த ஒரு கும்பலுடன் சேர்ந்து திட்டமிட்டு கார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டதில் கரும்பு கடையை சேர்ந்த முகமது யாசீர், அசாருதீன், முகமது யூசுப், ஜான்சுந்தர் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கடந்த 28 ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீசாரின் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வழக்கில் கைதான நபர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.
மேலும் கேரளாவில் இயங்கி வரும் கும்பலில் உள்ளவர்கள் அங்கு இருக்கும் சொகுசு கார்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்து கொண்டு, அவர்களுக்கு தெரியாமல் கோவைக்கு வந்து கரும்புகடையில் உள்ள ரியாசுதீன் மற்றும் தௌபீக் என்பவர்களிடம் அடமானம் வைத்து பணம் பெற்று கொள்வது தெரியவந்தது. அந்த கார்களில் உள்ள ஜிபிஎஸ் கருவியை துண்டித்து அகற்றியும், வாகனத்தின் நெம்பர் பிளேட்டையும் கழட்டி எடுத்து அதற்கு பதிலாக யாரும் கண்டுபிடிக்க முடியாத படி குற்றவாளிகள் புதியதாக ஜிபிஎஸ் பொருத்தியும், ஜான்சுந்தர் என்பவரது ஒர்க் ஷாப்பில் வைத்து புதியதாக பெயிண்டிங் செய்து கலரை மாற்றி காரை விற்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் விற்ற கார்களில் பொருத்தி உள்ள ஜிபிஎஸ் கருவியை கொள்ளையர்கள், டிபி ட்ராக் என்ற செல்போன் செயலி மூலம் கார்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் காரின் உண்மையான உரிமையாளர்களிடம் காணாமல் போன கார் எங்கு உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் எனவும், நேரில் வந்தால் உங்களுக்கு உதவுவதாக கூறி வரவழைத்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
மேலும் இவ்வழக்கில் அப்பாஸ், ரியாசுதீன், முகமது வஹாப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திருடிய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu