கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள் அச்சம்..!

கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள் அச்சம்..!
X

காட்டு யானை வீட்டின் கூரை வழியாக அரிசியை எடுக்க முயற்சி செய்கிறது.

தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்த யானை, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப்பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவனூர் வனப் பகுதியில் தற்போது ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஆறு மணி அளவில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது வனத்தை ஒட்டியுள்ள அக்கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. பின்னர் அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்த யானை, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை ஆண் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!