காட்டு யானை தாக்கி ஆதிவாசி உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

காட்டு யானை தாக்கி ஆதிவாசி உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
X
யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

குறிப்பாக தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அட்டுக்கல் என்ற கிராமத்திற்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (30) என்பவர் காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதிக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!