கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது

கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட கோகுல்

முன் விரோதம் காரணமாக குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். 26 வயதான, இவர் நேற்று மாலை செல்வபுரம் அடுத்த அசோக் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் 4 பேர் கோபாலகிருஷ்ணனை கத்தியால் வெட்ட முயன்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் தப்பிக்க அங்கிருந்து ஓடியும் கோகுலகிருஷ்ணனை விடாமல் துரத்திய உறவினர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல் துறையினர் உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கெம்பட்டி காலனியில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததும் டிவி சத்தமாக வைத்த பிரச்சனையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று குடிபோதையில் மீண்டும் பேச்சு எழுந்த நிலையில், அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கோபாலகிருஷ்ணனை வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜப்பான் என்கிற ப்ரவீன், சந்துரு, சூர்யா, நாகராஜ், சஞ்சய் ஆகிய 5 பேரை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்த போது சூர்யா என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!