கெட் அவுட் மோடி என்பதை டிரண்டிங் செய்ய வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் ஐடி விங் 2.0 என்ற பெயரில் ஐடி விங் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இதில் ஐடி விங் நிர்வாகிகள் இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
கோவையில் சோஷியல் மீடியா சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரை தொடர்ந்து ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தீர்கள். இதேபோல், கலைஞர் மாணவ நேசன் என்ற பத்திரிக்கையில், கையெழுத்து பத்திரிகையான அதில் அவரே எழுதுவார், கார்ட்டூன் வரைவார். இப்போது சோஷியல் மீடியா பெரிய அளவில் சென்று விட்டது. நம்மிடம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என பல விஷயங்கள் உள்ளன. இதனை மக்களிடையே கொண்டு செல்வது நீங்கள் தான்.
சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட சோசியல் மீடியாவால் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 6 வருடத்திற்கு முன்னால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் ஜல்லிக்கட்டு மூலம், சோசியல் மீடியா ஆட்டம் காண வைத்தது. தெரிந்தே பொய் செய்திகளை பாஜக பரப்பி வருகின்றது. புயல் வந்தால் தமிழ்நாட்டு பக்கம் தலை வைக்காதவர்கள், தேர்தல் வந்தால் வாரத்திற்கு இரண்டு முறை வருவார்கள். பாஜக முழுக்க முழுக்க பொய்களை மட்டும் நம்பி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
பல்லடத்தில் பாஜக கூட்டத்தில் ஜெயல்லிதாவின் படத்திற்கு மலர் தூவியவர், அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்று சொல்லி உள்ளார். பிரதமருக்கு தெரியாதா ஜெயலலிதா ஊழல் செய்து ஒரு முறை அல்ல பல முறை சிறை சென்றவர் என்று? உச்சநீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்கு மலர் தூவி, ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஒரே பிரதமர் மோடி தான்.
இவருடைய 10 ஆண்டு ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது? திமுகவை ஒழிப்பதாக கூறியவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர். திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. கூவத்தூரில் என்ன நடந்தது அனைவருக்கும் தெரியும். பழனிசாமிக்கு இன்னொரு செல்ல பெயர் உண்டு. பாதம் தாங்கி பழனிச்சாமி என அவரே கூறி உள்ளார், மண்டியிட்டு முதல்வரானேன் என்று. உண்மையில், பாஜகவின் மாநில டீம் அதிமுக, அதிமுகவின் தேசிய டீம் பாஜக. அதிமுக ஆட்சியில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது திமுக. ஆனால் அதிமுக வாயைவே திறக்கவில்லை.
தூத்துக்குடி, நெல்லையில் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதியை முதல்வர் அறிவித்தார். நாம் மத்திய அரசிடம் நிதி கேட்டோம், தந்தார்களா? மகளிர் இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் இவையெல்லாம் பார்த்து மற்ற மாநிலங்களில் செயல்படுத்துறாங்களே அது தான் திராவிட மாடல்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே உடை, ஒரே கட்சி என்று வந்து விடும். 2021 ல் அடிமைகளை விரட்டி தமிழ்நாட்டிற்கு விடியலை தந்தவர் நம் தலைவர். அதேபோல் தற்போது அடிமைகளின் ஓனர்கள் ஏஜெண்டுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல். போன தேர்தலுக்கு ’கோ பேக் மோடி’ டிரன்டிங் ஆனதை போன்று, இந்த முறை ’கெட் அவுட் மோடி’ என்பதை டிரண்டிங் செய்ய வேண்டும் என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu