வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியவர் கைது - 6 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
சுல்தான்பேட்டையில் வீட்டில் சாராயம் காய்ச்சியவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். 34 வயதான இவர் வீட்டிலேயே கைத்தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இன்று காலை, தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நோக்கி சுந்தர்ராஜ் சென்றுள்ளார்.
அவ்வழியில் உள்ள ஜெ கிருஷ்ணாபுரம் பகுதியில், காமநாய்க்கன்பாளையம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற சுந்தர்ராஜை, காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 கேன்களில் கள்ளச் சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுந்தர்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் சாராயம் காய்ச்சி ஒப்புக் கொண்டார். இதையடுத்து காமநாய்க்கன்பாளையம் காவல் துறையினர், சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அவரது வீட்டில் குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்று கள்ளச் சாராயத்தை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் 75 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சுந்தர்ராஜை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu