கோவையில் விமானத்தில் வந்து கொள்ளையடித்த வட மாநில கும்பல் கைது

கோவையில் விமானத்தில் வந்து கொள்ளையடித்த வட மாநில கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் உமா, கார்த்தி, பூபதி, சுரேஷ், தங்க பொண்ணு, ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமலா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது பூமார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடினர்.

இதனை பார்த்த போலீசார் மெதுவாக அவர்களது அருகில் சென்று 7 பேர் கும்பலையும் சுற்றி வலைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் மகடோ (வயது 36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் அவர்கள் கூறிய தகவல் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாவது:-

நாங்கள் 7 பேரும் பீகார், ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள், நாங்கள் வாரத்தில் ஒரு நாள் கோவை வருவோம், இங்கு காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கி கொள்வோம். பின்னர் 7 பேரும் எங்கு சென்றாலும் கும்பலாக செல்வோம்.

கடைகளுக்கு செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடி கொண்டு வந்துவிடுவோம். விசேஷ நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு செல்வோம்.

பின்னர் வாரத்தில் 1, 2 நாட்கள் திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பகுதிகளுக்கும் சென்று கொள்ளை அடித்து வருவோம். கோவையில் காலை நேரத்தில் உழவர் சந்தை, பூமார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.

அங்கு அதிகாலை சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடுவோம். பின்னர் ரெயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களுக்கு செல்வோம். எங்கள் கும்பலில் 3 சிறுவர்கள் உள்ளனர். அவர்களே பெரும்பாலும் திருடுவார்கள். சிறுவர்கள் சிக்கி கொண்டால் சில சமயங்களில் எச்சரித்து விட்டு விடுவார்கள்.

நாங்கள் கோவை வந்து எங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது ஒருவர் விமானத்தில் செல்வோம் மற்றவர்கள் ரெயிலில் வருவார்கள். சுழற்சி முறையில் கோவையில் இருந்து ஒருவர் ஒருவராக விமானத்தில் செல்வோம். அங்கு சென்று ஆடம்பரமாக செலவு செய்து ஜாலியாக இருப்போம். பணம் தீர்ந்ததும் மீண்டும் கோவை வந்து கொள்ளை அடிப்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!