டாஸ்மாக் பொங்கல் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படவில்லைL அமைச்சர் விளக்கம்
அமைச்சர் முத்துசாமி
கோவை மாவட்டம் சூலூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுப்பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதை துவக்கி வைத்தனர்.
அப்போது சூலூர் கலைமகள் நகரில் உள்ள நியாய விலை கடைக்கு உட்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு இந்த பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பயனாளர்களையும் நேரில் சந்தித்து பரிசு தொகுப்புகளை வழங்கிய அமைச்சர், முதல்வர் ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட கவரில் வைத்து கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் தொகை கொண்ட கவரை திறந்து பார்த்து சோதித்தார். மூதாட்டி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு கவரை சோதித்த அமைச்சர், ஆயிரம் ரூபாய் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள சோதனை மேற்கொண்டதாக அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம் நகைப்புடன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்தில் 1537 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 4,836 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கம், முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக சுமார் 122 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் யாருக்கும் விடுபட்டு விடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 14ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பரிசு பொருட்கள் குறைக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”சென்னை, மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேண்டிய கடினமான சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும் இடங்களை சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார் என்றார்.
டாஸ்மாக் பொங்கல் விற்பனைக்கான இலக்கு குறித்த கேள்விக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு. டாஸ்மாக்கில் விற்பனையாகும் தொகை தவறான இடத்திற்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கவே வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது என பதில் அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu