எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது : முத்தரசன் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது : முத்தரசன் குற்றச்சாட்டு
X

Coimbatore News- முத்தரசன் பேச்சு

Coimbatore News- இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருக்காது என மோடி பேசுவதும் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என முத்தரசன் குற்றம் சாட்டினார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை கண்ணம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியதாவது,

இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு மாநில முதல்வர்களை சிறையில் அடைத்துவிட்டு தேர்தல் நடத்தும் பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் இறுதி காலகட்டம் எப்படி இருந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி எண்ணிப் பார்க்க வேண்டும்.

2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்கின்ற மோடியின் கேரண்டி என்ன ஆனது? 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேட்டால் கச்சத்தீவு பிரச்சனையை பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதியது உண்டா?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சிறப்பான திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடியோ மக்களை திசை திருப்பும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வாஜ்பாய் மற்றும் சாவர்க்கர் இரண்டு பேரை தவிர சுதந்திரப் போராட்டத்தில் அந்த கட்சியினர் யாரும் ஈடுபடவில்லை. ஈடுபட்ட இருவரும் கைதான இரண்டே நாட்களில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த வரலாற்றை அவர்கள் படிக்க வேண்டும். அதிமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காது என அண்ணாமலை பேசி வருவது அவரது அறியாமையை காட்டுகிறது.

இதே போல் இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருக்காது என மோடி பேசுவதும் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நிறைவேறாது. 19ஆம் தேதி நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!