கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தற்கொலை - கொள்ளையர்கள் அட்டூழியம்

கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தற்கொலை - கொள்ளையர்கள் அட்டூழியம்
X

நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை

கோவை அருகே, பெண்ணை பலாத்காரம் செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண், தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த தம்பதி. இவர்களில் கணவர், காரணம்பேட்டை சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். மனைவி, சோமனூர் பேருந்து நிலையம் அருகே தையல் கலை மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார்.

நேற்று காலை அழகு நிலையத்திற்கு சென்ற மனைவி, இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது கணவர் அங்கு சென்று பார்த்தபோது, அழகு நிலையத்தில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது மனைவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அழகு நிலையத்திற்கு மூன்று நபர்கள் வந்ததும், அவரது கை கால்களை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்ததோடு, 19 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கணவன் மனைவி இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கும் போது, வீட்டிற்கு சென்ற மனைவி, தூக்கிட்டு கொண்டதாக, அக்கம்பக்கத்தினர் கணவரிடம் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர், மனைவியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் சம்பவம் நடந்த, அழகு கலை நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான ரேகைகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!