இந்தியா - ஜெர்மனி நாடுகளின் கூட்டு விமான போர் பயிற்சி கோவையில் தொடக்கம்
கோவை விமான நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் போர் விமானங்கள்.
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் கூட்டு போர் பயிற்சி இன்று தொடங்கியது.
இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்திய, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் ஆகஸ்ட்-14ம் தேதி வரை கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். போர் விமானத்தில் கோவையில் தரையிறங்கிய ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, 'இந்திய விமான படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சி கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி. ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுவரை இது போன்ற கூட்டு போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் நாட்களில் இந்த கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்' என்றார்.
இந்த விமான போர்ப் பயிற்சியில் இந்தியாவின் அதிநவீன போர் விமானங்களான தேஜஸ், Su-30MKI, Mig29K மற்றும் பிற நாடுகளின் கனரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu