கணேசமூர்த்தி எம் பி.ஆபத்தான நிலையில் உள்ளார் என துரை வைகோ தகவல்

கணேசமூர்த்தி  எம் பி.ஆபத்தான நிலையில் உள்ளார் என துரை வைகோ தகவல்
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ

கணேசமூர்த்தி எம் பி.ஆபத்தான நிலையில் உள்ளார் என துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென இன்று அவரது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதிமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளரான துரை வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து விட்டு திரும்பினார்.

இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது. 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈரோட்டிலேயே வயிறு சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதார். ரத்தத்தில் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவார் என அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil