கோவை கருமத்தம்பட்டியில் வடைகளை வழங்கி தி.மு.க.வினர் நூதன பிரச்சாரம்

கோவை கருமத்தம்பட்டியில் வடைகளை வழங்கி  தி.மு.க.வினர் நூதன பிரச்சாரம்
X

கோவை கருமத்தம்பட்டியில் வடைகள் வழங்கிய திமுகவினர்.

மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் திமுகவினர் வடைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் சூலூர் தொகுதி ஐடி விங்க் சார்பில், மோடி சுட்ட வடைகள் என்ற துண்டு பிரசுரம் மற்றும் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் மோடி சுட்ட வடைகள் என்ற பேனரில் பிரதமர் மோடியின் கைகளில் வடைகள் இருப்பது போலவும், அவர் அளித்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும் இருந்தனர்.

கருப்பு பணம் மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்துதல், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல், எல்லோருக்கும் சொந்த வீடு தருதல், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை, மோடி சுட்ட வடைகள் என குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் 10 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் வாயில் வடை சுட்டு வருவதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் சுவையான வடைகளை சுட்டு வழங்கியதாக திமுகவினர் தெரிவித்தனர். திமுகவினர் வழங்கிய வடைகளை பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் வாங்கி சுவைத்து சென்றனர். சிலர் மோடி சுட்ட வடைகள் என்ற பேனர் முன்பு செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து சென்றனர். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில், திமுகவினரின் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நூதன பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!