பாஜகவின் பினாமி கட்சிதான் அதிமுக : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சாடல்
கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று காலை சூலூர் ஒன்றிய பகுதிகளான குளத்தூர், வெங்கிடாபுரம், சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், நீலாம்பூர், முதலிபாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் வெங்கிடாபுரம் பகுதியில் பேசும்போது,
திமுக ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறார். திமுக அரசு என்றுமே பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மணிப்பூரில் பெண்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது.
இதனையெல்லாம் பாஜக அரசு சிந்தித்து கூட பார்க்கவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும் எனவும், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால் அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். விரிவாக்கம் செய்தால் நிறைய தொழிற்சாலைகள் வரும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதனை பற்றியெல்லாம் பாஜக கண்டு கொள்வதில்லை. அம்பானி வீட்டு திருமணத்திற்காக 10 நாளில் சர்வதேச விமான நிலையம் அங்கீகாரம் கொடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் கோவையை சர்வதேச விமான நிலையமாக செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.
அதிமுகவின் பிரதம வேட்பாளர் யார்? என்று தெரியாமலேயே போட்டியிடுகின்றனர். பாஜகவை சமாதானப்படுத்த தேர்தலில் நிற்கின்றனர். பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாது. அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பாஜகவுக்கு பயந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். பாஜகவின் பினாமி கட்சிதான் அதிமுக. அந்த கட்சிக்கு போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஐஎன்டிஐஏ கூட்டணிதான் வெல்லும் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu